30 நாட்களுக்குள் அமலுக்கு வருகிறது... இந்தியாவுக்கு 100 % வரை கூடுதல் வரி - டிரம்ப் அறிவிப்பு!
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது நூறு சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பதற்கான புதிய சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை ரஷ்ய எரிசக்தியை அதிகளவில் வாங்கிவரும் இந்தியாவையும் நேரடிப் பாதிப்புக்குள்ளாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளைக் குறிவைக்கும் வகையில், அவற்றின் மீது நூறு சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் புதிய சட்டம், எதிர்வரும் 30 நாட்களுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த வரி விதிப்புச் சட்டம் பிரதானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முன்னணி இடத்தில் திகழ்ந்து வருவதால், அமெரிக்காவின் இந்த புதிய சட்ட அமலாக்கம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
