"திரிஷா துணை முதல்வரானாலும் ஆச்சரியமில்லை... படம் ஊத்திக்கிட்டதால விஜயைக் காணவில்லை" - ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!
நடிகை திரிஷாவுக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், 'ஜனநாயகன்' திரைப்படம் தோல்வியடைந்ததால் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற அம்மா பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்குத் தான் அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார். இந்த வரிசையில் நடிகை திரிஷாவுக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் கூட அது யாரையும் ஆச்சரியப்படுத்தாது."

"மேகதாது, காவிரி விவகாரம் மற்றும் தமிழகத்தின் வறட்சி குறித்துக் கேள்வி எழுப்பினால் வாய் திறக்காத நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்துப் பாப்கான் சாப்பிட மட்டுமே வாயைத் திறக்கிறார்."
"'ஜனநாயகன்' திரைப்படம் தோல்வியடைந்து விட்டதால், கடந்த 3 நாட்களாகப் பட அதிர்ச்சியில் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்திற்கே வரவில்லை."தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியிடம் உண்மை, உழைப்பு மற்றும் கருணை மட்டுமே உள்ளது. விஜய் போல வசீகரமான தோற்றம், பஞ்ச் டயலாக் பேசி இளைஞர்களைப் பஞ்சராக்க அவருக்குத் தெரியாது. மக்கள் மனதைப் படிக்கத் தெரிந்த பழனிசாமிக்கு அரசியல் நாடகம் ஆடத் தெரியாது."

"முன்பு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்யைக் காப்பாற்றியதே பழனிசாமிதான். ஆனால், அதனை மறந்து அவரை மனித அபிமானம் இல்லாமல் விஜய் விமர்சித்து வருகிறார்." மேலும், அமைச்சர் பதவி ஆசையில்தான் சில எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவிலிருந்து விலகியதாகவும், மாற்றுக்கட்சிக்குச் சென்றவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
