மீன் உணவகம் தான்.. சாப்பிட இல்லை.. ரசிக்க.. இணையதளத்தில் வைரலாகும் மீன் ரெஸ்ட்ராண்ட்..!!

 
Sweet Fish Cafe

தாய்லாந்தில் உள்ள உணவகம் ஒன்று அதன் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதாக அமைந்தது. இந்த உணவகத்தின் பெயர் ஸ்வீட் மீன் கஃபே ஆகும். அந்த மீனின் பெயரே ஸ்வீட் மீன் என்பதுதான். சமூக வலைதளத்தில்  ஒருவர் வெளியிட்ட இந்த வீடியோ, தொடர்ந்து மற்ற சமூக வலைதளங்களிலும் டிரெண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த உணவகத்தின் தரைதள பகுதியில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் நிரப்பி, அதில் வண்ணமயமான மீன்கள் விடப்பட்டிருக்கின்றன. அவை விருந்தினர்களுக்கு மத்தியில் நீந்தி வருவது வழக்கம்.


சுவையான உணவுடன் மீன்களை பார்த்தப்படியே நீங்கள் சாப்பிடலாம். இந்த மீன் நிறைந்த உணவகம் குறித்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமாகியிருந்தது. இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர் ஒருவர் புகார் கூறிய நிலையில், தொடங்கிய சில மாதங்களிலேயே உணவகம் மூடப்பட்டது. முன்னதாக, இந்த உணவகத்தின் உரிமையாளர் யோசாபால் ஜிட்மங், இதுகுறித்து கூறும்போது மீன்களை கொண்டு உணவகம் அமைத்த மற்றொரு நிறுவனமான அமிக்ஸ் காஃபியை பார்த்து, ஈர்க்கப்பட்டு தானும் அதுபோன்ற உணவகத்தை அமைத்ததாகத் தெரிவித்தார்.

உணவகம் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், மீன்கள் வாழுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது ஊழியர்களுக்கு சவால் நிறைந்த வேலையாக இருந்தது. அசுத்தமான தண்ணீரில் மீன்கள் வாழாது என்ற நிலையில், 4 சுத்திகரிப்பான்களைக் கொண்டு தண்ணீர் சுத்திகரிக்கும் வேலை தினசரி நடைபெற்று வந்தது. உணவகத்திற்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் கால்களை கழுவி, சுத்தம் செய்து கொண்ட பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் தினசரி இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டது. விருந்தினர்கள் மீன்களை தொடவோ, அவற்றை தொந்தரவு செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர். பொதுவாக இந்த ஸ்வீட் மீன்கள் வெளிப்புற நீச்சல் குளங்கள் அல்லது தண்ணீர் தோட்டம் ஆகியவற்றில் அழகுக்காக வளர்க்கப்படுபவை ஆகும். இவை மனிதர்களைக் கண்டு அச்சம் கொள்ளாது மற்றும் பிற மீன் வகையைப் போல, மனிதர்களின் புண், தோல் போன்ற பகுதிகளைக் கடிக்காது.

From around the web