வெட்கக்கேடு - ‘செந்தில் பாலாஜி ஓடி ஒளிந்துக் கொண்டிருப்பது தான் விதியின் விளையாட்டு!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க ₹180 கோடி குதிரை பேரம் பேசப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுப் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் பாஜக கடும் விமரிசனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
"சென்ற ஆட்சியில் அசைக்க முடியாத, மிகச் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜி தற்போது ஓடி ஒளிந்து கொண்டிருப்பது விதியின் விளையாட்டு" என்று பாஜக மாநிலத் துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார்:
"கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டு, யாராலும் அசைக்க முடியாத உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தவர் செந்தில் பாலாஜி. ஆனால், இன்று தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் சிக்கிப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருப்பதுதான் விதியின் விளையாட்டு."
"தற்போது அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரதிநிதியாக இருந்தும் கூட, காவல்துறையின் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் சொல்ல இயலாத நிலையில், கண்காணாத இடத்திற்குச் சென்று மறைந்து வாழ்வது ஒட்டுமொத்தப் பொதுவாழ்விற்கே வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுத் திருவல்லிக்கேணி போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் இந்த விமரிசனம் திமுகவிற்குப் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தவெக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தரப்பு ₹120 கோடி ஊழல் செய்துள்ளதாகப் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் சிபிஐ மிரட்டல் விடுத்துள்ள வேளையில், நாராயணன் திருப்பதியின் இந்த எக்ஸ் பதிவு தமிழக அரசியல் போரை மேலும் சூடாக்கியுள்ளது.
