சட்டத்திற்கு எதிரானது... முஸ்லீம் இடஒதுக்கீட்டை உயர்த்தும் முடிவை தவெக கைவிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்கும் தவெக அரசின் முடிவுக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முஸ்லிம்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டைத் தற்போதைய அளவிலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன்வைத்திருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்று பாஜக சாடியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதம் சார்ந்த இடஒதுக்கீடு வழங்குவது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. அதனை மேலும் உயர்த்துவது நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணானது.
தற்போதைய சூழலில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தினால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பெரும்பான்மையான இந்து மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் பாதிக்கும். அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இது அமையும்.
வாக்கு வங்கி அரசியலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தவெக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியைப் பாதிக்கும் வகையில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை உயர்த்தும் இந்த உத்தேச முடிவைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
