"30 நிமிடங்கள் ஆச்சு..." - துணை சபாநாயகரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைப் பேசுவதிலிருந்து தடுத்து நிறுத்திய துணை சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் வசம் உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கருத்துக்களை முன்வைத்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். அப்போது அவரது உரையை இடைமறித்த துணை சபாநாயகர், ஏற்கனவே 30 நிமிடங்களாகப் பேசிவிட்டதாகக் கூறி அவரது பேச்சை நிறுத்த முயன்றார்.
சபாநாயகரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே பேசுவதாகத் தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், துணை சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்கும் வகையில் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து பேசுவதற்குத் துணை சபாநாயகர் பின்னர் அனுமதியளித்தார்.
