”85 நாட்கள் ஆச்சு... புதுத் திட்டம் எங்கே?” - தவெக பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ்!
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 85 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"புதிய அரசு அமைந்து 85 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு புதிய திட்டமும் இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்படவில்லை. தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதிகள் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதில் இடம்பெறாதது வேதனையளிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

தாலிக்குத் தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற எளிய மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள சூழலில், அதைச் சரி செய்ய அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. இந்த குறுகிய காலத்தில் மட்டும் ரூ.20,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். மொத்தமுள்ள ரூ.10.98 லட்சம் கோடி கடனை எவ்வாறு அடைக்கப் போகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
"சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' விட்டு ரீல் விடுவது தான் இந்த அரசின் ஒரே சாதனையாக உள்ளது. விளம்பர அரசியலை விட்டுவிட்டு மக்களின் நிஜப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். திமுகவைப் போல் கடன் வாங்குவதற்காகத் தான் குழு அமைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது" எனக் காரசாரமாகச் சாடினார்.
