"அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல..." - வைரல் வீடியோ பெண் விளக்கம்!

 
கீர்த்தனா

சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் குறிப்பிட்டுக் பரப்பப்பட்டு வந்த வீடியோவில் இருப்பது தான் தான் என்றும், அமைச்சர் அல்ல என்றும் சம்பந்தப்பட்ட பெண் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் சொகுசு காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று, "தமிழக அமைச்சர் கீர்த்தனா" என்ற தவறான தகவலுடன் அண்மையில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தமிழக அரசியல் களத்திலும், இணைய தளங்களிலும் பல்வேறு விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்த அந்தப் பெண், வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது முற்றிலும் தான் தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காகத் தனது தனிப்பட்ட வீடியோவை எடுத்துத் தவறான தகவல்களுடன் பரப்பி வருவதைப் பார்த்துத் தான் கடும் மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்தார்.

கீர்த்தனா

தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், எனவே தன்னைப்பற்றியும் இந்த வீடியோ பற்றியும் தவறான வதந்திகளைப் பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.