"நேற்று முளைத்த காளான் அல்ல" - மேடையில் தவெகவை வறுத்தெடுத்த மேயர் பிரியா!
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சென்னையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேயர் பிரியா, "திமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று திடீரென முளைத்த காளான் போன்ற இயக்கம் கிடையாது. இது பல தசாப்த கால நீண்ட அரசியல் வரலாற்றையும், கோடிக்கணக்கான மக்களின் அசைக்க முடியாத ஆதரவையும் கொண்ட ஒரு பேரியக்கம்" என்றார்.

தொடர்ந்து தற்போதைய தமிழக ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய மேயர் பிரியா, "தற்போது தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ளவர்கள், எந்த மாதிரியான ஒரு அரசை நடத்துகிறார்கள் என்பதே அவர்களுக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நிர்வாகக் குழப்பங்களும், தெளிவற்ற தன்மையுமே இந்த ஆட்சியில் நீடித்து வருகிறது" என்று தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பல்வேறு அரசியல் மோதல்கள் நிலவி வரும் சூழலில், சென்னை மேயர் பிரியா ஆளுங்கட்சியைத் நேரடியாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
