“தங்கம் வாங்காதீங்க என்பது அறிவுரையல்ல; தோல்வியின் சான்று!” - ராகுல் காந்தி!
மேற்காசியப் போர்ச் சூழல் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதைக் காரணமாகக் காட்டி, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள் இப்போது தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பிரதமரின் இந்த அறிவுரையைப் பொருளாதாரத் தோல்வியின் அடையாளம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றக் கேட்டுக்கொண்டார்: திருமண நிகழ்வுகளுக்காக அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எரிபொருள் (பெட்ரோல்/டீசல்), உரம் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில்களில் பயணிப்பது மற்றும் முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்வது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றிச் செலவுகளைக் குறைக்க வலியுறுத்தினார். பிரதமரின் இந்த உரைக்குத் தனது 'எக்ஸ்' தளத்தில் காரசாரமாகப் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, "நேற்று மோடி அவர்கள் மக்களைத் தியாகம் செய்யக் கேட்டுக்கொண்டார். இது வெறும் அறிவுரை அல்ல, கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள பொருளாதாரத் தோல்வியின் சான்று." மேலும், மக்கள் எதை வாங்க வேண்டும், எங்குச் செல்ல வேண்டும் என்று அரசு தீர்மானிக்கும் நிலைக்கு நாட்டை பிரதமர் கொண்டு வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "ஒவ்வொரு முறையும் அரசு தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்கிறது" எனவும் அவர் சாடியுள்ளார்.
அரசு தனது தவறான பொருளாதாரக் கொள்கைகளைச் சரி செய்யாமல், மக்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் அன்றாடத் தேவைகளில் தலையிடுவதாக இதர எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்கம் என்பது இந்தியக் குடும்பங்களின் கலாச்சாரம் மற்றும் முதலீட்டுடன் இணைந்தது என்பதால், பிரதமரின் இந்த வேண்டுகோள் சாமானிய மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
