“மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே நிற்பது அழகல்ல...” தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்!

 
ஜோதிமணி ஜோதிமணி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் நீடித்து வரும் இழுபறி குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனை நிரூபிக்க வேண்டிய ஒரே இடம் சட்டமன்றம் மட்டுமே என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மிகவும் தெளிவாக உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை மக்கள் ஏற்கனவே முதலமைச்சராக முடிவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட ஜோதிமணி, மக்கள் தீர்ப்பிற்குக் குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல எனச் சாடியுள்ளார்.

ஜோதிமணி

பாஜக அரசு ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்பதை அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராக உள்ள விஜய் அவர்களை ஆளுநர் உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜோதிமணி

ஆளுநருக்கு அரசியல் சாசன விதிகளும், ஜனநாயக மரபுகளும் தெரியும் என்று நம்புவதாகக் கூறியுள்ள ஜோதிமணி, காலதாமதம் இன்றிச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.