“இலவசம் வேண்டாம்.. வேலை கொடுங்க!” - நடுரோட்டில் அமைச்சரிடம் மல்லுக்கட்டிய பெண்.. பிரசாரத்தில் பரபரப்பு!

 
வாக்கு சேகரிப்பு வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தபோது, ஒரு பெண்ணின் அதிரடி கோரிக்கையால் பிரசாரக் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மலையடிப்பட்டி பகுதியில் அமைச்சர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். ராஜபாளையம் நகரின் குடிநீர் பிரச்னை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் பேசினார். அப்போது, திமுக அரசின் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் குறித்து அவர் பேசத் தொடங்கியபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தொடர்ந்து கூச்சலிட்டு இடையூறு செய்தார்.

வாக்கு சேகரிப்பு

கட்சியினர் அவரைத் தடுக்க முயன்றபோதும், அந்தப் பெண் அமைச்சரின் வாகனத்திற்கு அருகிலேயே வந்து, அவரிடம் இருந்த மைக்கைக் கேட்டு மல்லுக்கட்டினார். அவரைச் சமாதானம் செய்த அமைச்சர், “நானே டீல் செய்து கொள்கிறேன்” எனக் கூறி அந்தப் பெண்ணின் கோரிக்கையைச் செவிமடுத்தார்.

“திமுக ஆட்சிக்கு வந்தால் தான் பாதுகாப்பு இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம். இலவசங்களைக் கொடுத்து எங்களை வீட்டிலேயே உட்கார வைத்து விட்டீர்கள். எல்லா வீட்டிலும் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே, இலவசங்களுக்குப் பதில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள்.”

வாக்கு சேகரிப்பு

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டிய அமைச்சர், “அனைவரும் அரசு வேலையை எதிர்பார்க்கிறீர்கள். விரைவில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த உள்ளோம். அனைவரும் நேரில் எனது வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார். மேலும் “பத்து பைசா கூட யாரிடமும் கைநீட்டி நான் லஞ்சம் வாங்க மாட்டேன். என் முன்னோர்கள் எனக்குப் போதுமான அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர்” என உருக்கமாகப் பேசினார்.

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும், முதியோர் உதவித்தொகை உயர்வு மற்றும் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இலவசங்களுக்கு எதிராக ஒரு பெண் அமைச்சரிடமே நேருக்கு நேர் வாதிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.