நிமிஷ நேரம் தான்... புலி கூண்டுக்குள் குதித்தவர் பலி - இங்கிலாந்து வனவிலங்கு பூங்காவில் துயரம்!
இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள பிரபல யார்க்ஷையர் வனவிலங்கு பூங்காவில் , பார்வையாளர் பகுதிக்குத் தடை செய்யப்பட்டிருந்த புலியின் இருப்பிடத்திற்குள் திடீரெனக் குதித்த நபர் ஒருவர் புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத் யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள யார்க்ஷையர் வனவிலங்கு பூங்காவிற்கு வந்த பார்வையாளர் ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே ஆபத்தான சைபீரியன் புலி (அமூர் புலி) அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் திடீரெனக் குதித்து அத்துமீறி நுழைந்துள்ளார். அங்குச் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த புலி எதிர்பாராதவிதமாக அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் கடுமையான காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இது குறித்துத் தகவலறிந்த உடனடி அவசரகால மருத்துவக் குழுவினரும், விமான அவசர ஊர்தி மருத்துவ நிபுணர்களும் விரைந்து வந்து தீவிர சிகிச்சைகள் அளித்தனர். இருப்பினும், பலத்த காயங்கள் மற்றும் அதிக ரத்த இழப்பு காரணமாக அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் முழு விவரங்கள் மற்றும் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்துச் சவுத் யார்க்ஷயர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும், அது பாதுகாப்பான முறையில் தொடர்ந்து தனது அடைப்புக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதனால் எந்தவிதமான நேரடி அச்சுறுத்தலும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பூங்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அனைத்துப் பார்வையாளர்களும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யார்க்ஷையர் வனவிலங்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் துயரத்தையும் உணர்வுகளையும் மதிக்கக் கருதி அந்தப் பதற்றமான காட்சிகளைப் பொதுமக்கள் யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனக்காவல்துறை கடுமையான வேண்டுகோள் விடுத்துள்ளது.
