"விஜய் முதலமைச்சராவது தான் முறை!" - திருமாவளவன்!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி குறித்து சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய்க்குத் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தவெக தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

"மக்கள் அளித்த தீர்ப்பின்படி, அதிக இடங்களைப் பெற்றுள்ள கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோதமானது," என்று அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆளுநர் மூலம் தேவையற்ற குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக-விற்கு ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படும் நிலையில், விசிக-வின் ஆதரவு குறித்த கேள்விக்குத் திருமாவளவன் பதிலளிக்கையில், "விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து எங்கள் கட்சியின் உயர்நிலை மட்டக் குழுவில் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும். ஆனால், தற்போது நிலவும் அரசியல் சாசன முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்."

விசிக-விற்குச் சட்டமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவு தவெக-விற்கு கிடைத்தால், விஜய் 118 என்ற மேஜிக் எண்ணை நெருங்குவது எளிதாகும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஏற்கனவே விலகியுள்ள சூழலில், விசிக-வும் விஜய்யை ஆதரித்தால் அது திமுக-விற்குப் பெரும் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.
