“எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது!" – கவிஞர் வைரமுத்து கவிதை
தமிழ்த் திரையுலகில் தனது துள்ளலான கிராமிய மற்றும் கானா இசையால் பட்டிதொட்டியெங்கும் கோலோச்சிய 'தேனிசைத் தென்றல்' இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பாட்ஷா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நான் ஆட்டோக்காரன்' பாடல், ஆட்டோ ஓட்டுநர்களின் தேசிய கீதமாகவே இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரபல கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"சாவாப் பாடல்கள் தந்த
தேவா மறைந்துவிட்டார்
தேனிசைத் தென்றல்
நின்று போயிற்றா?
நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு
அனைத்திலும்
இசையாகவே இருந்தவர்
சங்கீதத்தோடு
இங்கிதம் தெரிந்தவர்
பண்ணிசைக்கத் தெரிந்த
பண்பாளர்
அவரோடு நான் பணியாற்றிய
அண்ணாமலை, பாட்ஷா
அருணாசலம், வாலி, குஷி,
நேருக்கு நேர், ஆசை,
பஞ்ச தந்திரம் முதலிய
நூற்றக்கணக்கான படங்களின்
பாட்டு வெற்றிக்கு
தேவாவே காரணம்

தேவாவின் இசையைப்போல்
ரஜினிக்கு வேறு யாரும்
பொருந்தவில்லை என்றுதான்
ரசிகர்கள் பேசுவார்கள்
என்ன சொல்வது?
எனக்கு என் விரல்களில்
ஒன்று போய்விட்டது
அவரை இழந்துவாடும்
குடும்பத்தார்க்கும்
ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
கவலைப்படாதே சகோதரா
என்று பாடியவனே!
இன்று நான் கவலைப்படாமல்
என்ன செய்ய?"
என்று இசையமைப்பாளர் தேவாவின் இழப்பை எண்ணி வைரமுத்து எழுதியுள்ள வரிகள் இசைப்பிரியர்கள் மத்தியில் கண் கலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது
