எல்லா கட்சியையும் பார்த்தாச்சு... தவெகவில் இணைகிறார் மன்சூர் அலிகான்!
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இணையும் விழா இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் ஏற்கனவே தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது பிரபல நடிகரும் 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகானும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மன்சூர் அலிகான், தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக தலைவர் விஜய்க்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று பனையூர் அலுவலகத்திற்கு வந்த மன்சூர் அலிகான், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெகவில் இணைந்து செயல்படுவது குறித்து முறைப்படி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
அவரது இந்தத் திடீர் வருகையையொட்டி பனையூர் கட்சித் தலைமை அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெக தொண்டர்கள் பெருமளவில் கூடியுள்ளதால், அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளதுடன் பெரும் பரபரப்பும் நிலவி வருகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த அடுத்தடுத்த இணைப்புப் படலங்கள், தமிழக அரசியல் களத்தில் தவெகவின் பலத்தை மேலும் ஒரு படி உயர்த்திக் காட்டும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
