டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்... வார விடுமுறை, 3 ஷிப்ட்டில் 8 மணி நேர வேலை... டிச.1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பணிச்சீரமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கையடக்கக் கருவி மூலமான ஆன்லைன் வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.
இதுவரை கடைகளில் பின்பற்றப்பட்டு வந்த எழுத்துப்பூர்வ வருகைப் பதிவேடு முறை ரத்து செய்யப்பட்டு, டிசம்பர் 1 முதல் கையடக்கக் கருவி வழியே ஆன்லைன் வருகைப்பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பதிலாக வெளிநபர்களைப் (ஊழியர் அல்லாதவர்களை) பணியில் அமர்த்திவிட்டுச் செல்வதைத் தடுக்கவும், ஊழியர்கள் முறையாக 8 மணி நேரம் பணிபுரிவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைப் பணியாளர்கள் அனைவரும் தினமும் 8 மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது: முதல் ஷிப்ட்: காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. இரண்டாவது ஷிப்ட்: மதியம் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. மூன்றாவது ஷிப்ட்: மதியம் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
ஒரு ஷிப்டில் குறைந்தது இரண்டு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும், மொத்தப் பணியாளர்களை மூன்று ஷிப்டுகளுக்கும் சமமாகப் பிரித்து நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடை மேற்பார்வையாளர்கள் மூன்று ஷிப்டுகளையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தாலும், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யக் கூடாது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு டாஸ்மாக் பணியாளருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்தந்தக் கடைகளில் விற்பனை குறைவாக உள்ள நாளைக் கணக்கில் கொண்டு, மாவட்ட மேலாளர் வார விடுமுறை நாளை முடிவு செய்து கடை மேற்பார்வையாளருக்குத் தெரிவிப்பார்.
ஊழியர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பும், மாதத்திற்கு 2 மணி நேர அனுமதியும் வழங்கப்படும். இந்த விடுப்பு மற்றும் அனுமதிகளுக்குப் பணியாளர்கள் கையடக்கக் கருவி மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்; மேற்பார்வையாளர் அதனைப் பரிசீலித்து ஒப்புதல் அளிப்பார். ஒரே கடையில் இருவர் ஒரே நாளில் விடுப்பு எடுக்கும் சூழல் வந்தால், கடைப் பணி பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
