விஜய்யின் ஆலோசகருக்கு ஜாக்பாட்... தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி நியமனம் செய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில் மாநிலத்திற்கு விரைவில் புதிய முழுநேர ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். பின்னர் ஆந்திரப் பிரிவினைக்குப் பிறகு கட்சிகளிலிருந்து விலகி, கடந்த 2023-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார். தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் சபாநாயகராகவும், முதல்வராகவும் பணியாற்றிய இவரது நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு இப்பதவிக்கு இவரது பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், மத்திய அரசு அல்லது குடியரசு மாளிகையின் தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போது பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களை முடித்துத் திரும்பியதும், மத்திய அமைச்சரவை மாற்றத்துடன் சேர்த்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
