ஜாக்பாட்... சபாநாயகராகும் செங்கோட்டையன்?! - விஜய்யின் 'மாஸ்டர் பிளான்'... தற்காலிக சபாநாயகராக நியமிக்க ஆளுநருக்குக் கடிதம்!

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

தமிழக சட்டமன்றத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க 'தற்காலிக சபாநாயகர்' ஒருவரை நியமிப்பது மரபு. அந்தப் பதவிக்கு அதிமுகவின் மிக மூத்த உறுப்பினரான செங்கோட்டையனை நியமிக்க விஜய் பரிந்துரை செய்துள்ளார்.

அரசியல் அனுபவம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளில் தேர்ந்த ஒருவரைத் தற்காலிக சபாநாயகராக நியமிக்க விஜய் விரும்புவதாகத் தெரிகிறது. தமிழக சட்டமன்றத்தில் அதிக முறை உறுப்பினராக இருந்தவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.

செங்கோட்டையன்

அதிமுக-வில் இருந்தாலும், மற்ற கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை என்பதால் இவரை விஜய் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஒரு மூத்த தலைவருக்கு இந்த கௌரவத்தை அளிப்பதன் மூலம், ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க விஜய் முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை விஜய் ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கியுள்ளார். முறைப்படி ஆளுநர் செங்கோட்டையனுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர், செங்கோட்டையன் மற்ற 233 எம்.எல்.ஏ-க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

செங்கோட்டையன் விஜய்

தற்காலிக சபாநாயகர் பணி முடிந்த பிறகு, செங்கோட்டையனை 'பேரவை முன்னவர்' பதவியில் அமர்த்தவும் விஜய் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவியில் இருப்பார்கள். ஆனால், செங்கோட்டையனின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள விஜய் ஆர்வம் காட்டுவது அதிமுக மற்றும் தவெக உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.