பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துங்க... முதலமைச்சர் விஜய்க்கு ஜாக்டோ ஜியோ கோரிக்கை!

 
jacto jio jacto jio

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ பேரமைப்பு தற்போது புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பேரமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாற்றுச் சிறப்பை படைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குத் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜக்டோ ஜியோ

அந்த அறிக்கையின்படி, கடந்த 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளபடி அரசு ஊழியர்களின் கனவான இந்த ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச முக்கியக் கோரிக்கைகளையும், மக்கள் நலன் சார்ந்த பிற திட்டங்களையும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு விரைந்து நிறைவேற்றும் என்று தாங்கள் பெரிதும் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ

இதனுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) விவகாரத்தில் ஆசிரியர்களைப் பாதுகாப்பது, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாகக் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவது மற்றும் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளும் அந்த அறிக்கையில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன