அமைச்சரானதும் ஊர் கிணற்றை ஆக்கிரமித்த ஜெகதீஸ்வரி... கொந்தளிக்கும் கிராம மக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஊர்க் கிணற்றை ஆக்கிரமித்துக் கொண்டதாக, தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது பனைவிளை கிராம மக்கள் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பனைவிளை கிராமத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர்ப் பொதுக் கிணறு ஒன்று பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கிணற்றை கிராம மக்கள் குடிநீருக்காகவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரியின் தந்தை, "இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது" எனக் கூறி கிணற்றைச் சுற்றி வேலி போட்டு அடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கிணறு அடைக்கப்பட்டதால் தாங்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்தவித நேர்மறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

"இந்த இடம் எங்கள் தாத்தா எங்களுக்கு எழுதி வைத்த சொத்து, அதைத் தர முடியாது" எனக் கூறிப் பேச்சை மறுத்ததாகவும், அதோடு காவல் துறையினரைக் கொண்டு தங்களை மிரட்டுவதாகவும் பனைவிளை கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
