முதலமைச்சரின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!

 
விஜய் ஜெகதீஷ்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் தனிச்செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதற்கான அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த புதிய பொறுப்பிற்கான பணி விதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை குறித்த விபரங்கள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்

ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சர் விஜய்யுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி வரும் நெருங்கிய நபராவார். முதலமைச்சர் விஜய் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில், அவருடைய மேலாளராக ஜெகதீஷ் பழனிசாமி பல வருடங்கள் பணியாற்றினார். பின்னர், விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கியதைத் தொடர்ந்து, அவருடைய முதன்மை உதவியாளராகச் செயல்பட்டு வந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபல நடிகைகளுக்கும் இவர் மேலாளராக பணிபுரிந்துள்ளார்.