அன்போடு வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவரை தூக்கி வீசி மிதித்துக் கொன்ற யானை... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
யானை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உஜ்ஜைனியில் இருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக யானை ஒன்றை பாகன் அழைத்து வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ராஜ்நகர் பகுதி தெருக்களில் யானையை பாகன் உமேஷ் கோஸ்வாமி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 49 வயதான விஜய் ஹல்கர் என்ற ஆட்டோ டிரைவர் யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்றுள்ளார். அன்போடு வெல்லம் ஊட்டிய ஆட்டோ டிரைவரை யானை திடீரெனத் தும்பிக்கையால் தூக்கி நிலத்தில் வீசி எறிந்துள்ளது.

கீழே விழுந்த டிரைவரை யானை கோபத்துடன் தனது கால்களால் மிதித்துத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பதறிப்போன அங்கிருந்த மக்கள் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை ஆட்டோ டிரைவரைத் தூக்கி வீசி மிதிக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில்   பரவி வருகின்றன.

நகரப் பகுதிகளுக்குள் உரிய அனுமதியின்றி யானையைக் கொண்டு வந்ததாக யானை பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலட்சியமாகச் செயல்பட்டு அசம்பாவிதத்திற்கு வழிவகுத்த பாகனைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.