பச்சிளம் சிறுமியை நாசம் செய்த வடமாநில இளைஞருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!
தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள பகுதியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 10 வயது பச்சிளம் சிறுமி ஒருவருக்கு, அங்கு தங்கி வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பச்சிளம் சிறுமி பயத்தில் அலறி கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த வடமாநில இளைஞரைப் பிடித்துச் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் காவல்துறையினர் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உஜாவல் குமார் (21) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சிறப்புப் படை போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான உஜாவல் குமாரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உஜாவல் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் இது போன்ற தொடர் பாலியல் குற்றங்கள் சமுதாயத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் துரிதமாகத் தண்டனை பெற்றுத்தரப்படும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
