'ஜெயிலர் 2' ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கு விற்பனை - தமிழ் சினிமாவில் புதிய சாதனை!

 
ஜெயிலர் 2 ரஜினி ஜெயிலர் 2 ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம், ரிலீஸிற்கு முன்பே வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமை குறித்து வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

'ஜெயிலர்' முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட அமேசான் பிரைம் நிறுவனம், சுமார் ரூ.160 கோடி கொடுத்து 'ஜெயிலர் 2' படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர்

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் ஓடிடி உரிமையை விட இது இரண்டு மடங்கு கூடுதல் விலையாகும்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மற்ற மொழிகளின் முன்னணி நட்சத்திரங்களும் நடிப்பதால், இந்திய அளவில் இதற்குப் பலத்த போட்டி நிலவியது.

ஜெயிலர்

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'ஜெயிலர் 2' வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக அதிரடி காட்டிய ரஜினி, இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் அரசியலுக்குச் சென்ற பிறகு, கோலிவுட்டின் 'நம்பர் 1' சிம்மாசனம் யாருக்கு என்ற போட்டி நிலவும் சூழலில், ரஜினி தனது 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் "இது இன்னும் என் கோட்டை தான்" என நிரூபித்து வருகிறார்.