லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் மோதி 2 ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பு!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில், பைக்கில் சென்ற ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவரும் அடையாளம் தெரியாத கனரக லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரியிலிருந்து எதிர்பாராதவிதமாக இரும்புப் பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. அந்தப் பொருள் அவர்கள் மீது பலமாக மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இணைபிரியா நண்பர்களான ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவரின் திடீர் மறைவு சித்தாலங்குடி கிராம மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்துச் சோழவந்தான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


