“முகத்தில் கேக் பூசியதால் ஆத்திரம்! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபர் கொலை”
ஜம்முவின் லோயர் ரூப் நகர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீரஜ் என்ற இளைஞர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரம் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவரது நண்பரான சமீர், நீரஜின் முகத்தில் கேக்கை பூசியதாக கூறப்படுகிறது.
முகத்தில் கேக் பூசியதை நீரஜ் விரும்பாததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், நீரஜ் கூர்மையான ஆயுதத்தால் சமீரை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சமீர் கீழே விழுந்துள்ளார். உடனிருந்த நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
