ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... தொடரும் தேடுதல் வேட்டை!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.உதம்பூர் மாவட்டம் மஜல்தா பகுதியில் உள்ள பிரட்டல் சோஹன் மற்றும் குபான் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ், ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் இணைந்து செப்.16-17 இரவு கூட்டு தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் குறைந்த பார்வைத்திறனுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
