பனிமலையில் சீறிப்பாயும் வந்தே பாரத்... ஜம்மு - ஸ்ரீநகர் இடையே ரெயில் சேவை தொடக்கம்!

 
jammu jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இமயமலையின் கடினமான நிலப்பரப்பில் பல சவால்களைக் கடந்து அமைக்கப்பட்ட இந்த புதிய ரெயில் பாதை, காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக ரெயில் சேவைக்குக் காஷ்மீர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலமான செனாப் பாலத்தின் வழியாகப் பயணிக்கும் இந்த ரெயில், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்குச் சாலை மார்க்கமாக 7 முதல் 8 மணி நேரம் ஆகும் நிலையில், வந்தே பாரத் ரெயில் மூலம் வெறும் 4 மணி 50 நிமிடங்களில் இலக்கை அடைய முடியும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் கடும் குளிரைத் தாங்கும் வகையில், இந்த ரெயிலின் உட்புறத்தில் பிரத்யேகமான வெப்பமூட்டும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பனிபடர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகை ரசித்தபடி செல்வதற்கு வசதியாகப் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே ரெயிலின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்த நிலையில், வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.