வதந்தி பரப்புவோருக்கு செக்: ஜம்முவில் சமூக வலைதளங்களுக்கு 60 நாட்கள் அதிரடி தடை!

 
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்


காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் நிலவி வரும் அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த 60 நாட்களுக்குச் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடவும், பகிரவும் மாவட்ட கலெக்டர் ராகேஷ் மின்ஹாஸ் அதிரடித் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாகச் சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாகப் பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்முவில் மோதலைத் தடுக்க நடவடிக்கை: சமூக வலைதளங்களுக்கு 60 நாட்கள் தடை

இந்தத் தடையை மீறி சமூக வலைதளங்களில் தேவையற்ற வீடியோக்கள், மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடுவோர் மீது பாரதிய நாகரிக் சசுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். போலிச் செய்திகளைப் பரப்புவோருக்குக் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அபராதம் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கச் சட்டத்தில் இடமுண்டு என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் குழுக்களின் நிர்வாகிகள் (அட்மின்கள்), தங்கள் குழுவில் இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மோதல்களைத் தூண்டும் வகையில் போலிச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த வாட்ஸ்அப், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வதந்திகளைப் பரப்புவோருக்குத் துணை போகும் குழு நிர்வாகிகளும் சட்ட ரீதியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டமான ஜம்முவில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த 2 மாத காலக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.