தேசிய வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.43 லட்சம் பணம், நகைகள் அபேஸ்.. !

 
canara bank

 

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜாம்ஷெட்பூர் நகரின் கோல்முரி பகுதியில் தேசிய வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வங்கிக்கு வழக்கம்போல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்திருந்த நிலையில், திடீரென 5 இளைஞர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் நடைபெற்ற இந்த கொள்ளையில் சுமார் ரூ.43 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையடித்த பொருட்களுடன் அந்த 5 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஜாம்ஷெட்பூர் நகர போலீஸ் சூப்பிரெண்டு கந்தேல்வால் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் சம்பவத்தின்போது ரெயின்கோட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் ஜாம்ஷெட்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் சரியான மதிப்பு மற்றும் கொள்ளையர்களின் அடையாளம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.