'ஜனநாயகன்' திரைப்படக் கட்டணம் ரூ.700 - ரசிகர்களிடம் கூடுதல் தொகை கேட்டு அதிர்ச்சி!

 
ஜனநாயகன்

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தை சட்டவிரோதமாக உயர்த்திக் கூடுதல் தொகை கேட்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூரில் இயங்கி வரும் குறிப்பிட்ட திரையரங்கு ஒன்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன: ஏற்கனவே ரூ.200 கொடுத்து ஆன்லைன் அல்லது நேரடி முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, "டிக்கெட் கட்டணம் ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள ரூ.500-ஐ QR கோடு மூலம் செலுத்துங்கள்" என வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஜனநாயகன்

ரூ.190 ஆக முறைப்படுத்தப்பட்ட அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி பல மடங்கு கூடுதல் தொகை வசூலிப்பது குறித்து ரசிகர்கள் இணையதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதே போல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சில திரையரங்க நிர்வாகங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்துப் பேசும் தவெக அரசின் ஆட்சியில், முதல்வரின் திரைப்படத்திற்கே இந்த நிலைமையா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி, கூடுதல் கட்டண வசூல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.