மாஸ்... விபத்தில் கையை இழந்த பெண் வயலின் கலைஞர் கின்னஸ் சாதனை!

 
ஜப்பான்

 

ஜப்பானைச் சேர்ந்த வயலின் கலைஞர் மனாமி இடோ, செயற்கைக் கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 42 வயதான இவர், முழுமையான செயற்கைக் கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே வயலின் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட மனாமி இடோ, கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் தனது வலது கையை இழந்தார். இதனால் இசைப் பயணத்தைத் தொடர முடியாது என நினைத்த அவர், பின்னர் மனம் தளராமல் மீண்டும் வயலின் வாசிக்க முடிவு செய்தார்.

இதற்காகத் தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கைக் கையைப் பொருத்திக்கொண்டு பயிற்சி மேற்கொண்டார். அந்தக் கையில் வயலின் வில் இணைக்கப்பட்டிருக்கும். தோள்பட்டை மற்றும் உடல் அசைவுகளைப் பயன்படுத்தி வில்லை இயக்கி இசையை உருவாக்குகிறார்.

Japanese musician learns to play violin again with prosthetic arm after bike accident | Guinness World Records

தொடர்ந்து பயிற்சி செய்த அவர், 2012-ம் ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் வயலின் வாசித்தார். இந்தச் சாதனை தற்போது 2027-ம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இசைக் கலைஞராக மட்டுமின்றி, பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனையாகவும் மனாமி இடோ சாதித்துள்ளார். 2008 பெய்ஜிங் மற்றும் 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அவரது விடாமுயற்சி பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.