ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்.. இந்திய ஜோடி காயத்ரி - த்ரிஷா வெற்றி!

 
இந்தியா பேட்மிண்டன்

ஜப்பான் நாட்டின் குமாமோட்டோ நகரில் நேற்று தொடங்கிய ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி இரட்டையர் ஜோடிகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை ஜோடியான காயத்ரி - திரிஷா ஜாலி கூட்டணி களம் கண்டது. ஜப்பானின் ஹினதா சுசுகி - நாவ் யமாகிதா இணையுடன் மோதிய இந்திய ஜோடி, 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

உலக பேட்மிண்டன் காயத்ரி கோபிசந்த்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன் - எம்.ஆர்.அர்ஜூன் இணை மலேசியாவின் பலம் வாய்ந்த ஆரோன் சியா - சோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட் ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, மலேசிய வீரர் காயமடைந்தார். இதனால் மலேசிய இணை போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா - ராதிகா சர்மா கூட்டணித் தோல்வியைச் சந்தித்துத் தொடரிலிருந்து வெளியேறியது. அமெரிக்காவின் சென் ஜி யி - பிரான்சிஸ்கா கார்பெட் இணையிடம் 16-21, 15-21 என்ற நேர்செட்களில் இந்திய ஜோடி தோற்றது.