முன்னாள் அரசியல் வேட்பாளர் கோட்டோய் ஹாஷிமோட்டோவுக்கு 7வது குழந்தை!
ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான முப்பத்து ஏழு வயதான கோட்டோய் ஹாஷிமோட்டோ தனக்கு 7-வது குழந்தை பிறந்ததாகச் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் 2 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஜப்பானில் பிறப்பு விகிதம் கடுமையாகச் சரிந்து வரும் நிலையில் இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
குழந்தைகளைப் பெற்றெடுக்க இதுவே சரியான தருணம் என்று அவர் மற்ற பெண்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு அவர் விடுத்துள்ள இந்தச் செய்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது இந்த அறிவிப்புக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் விமரிசனங்களும் எழுந்து வருகின்றன.
பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் உள்ள சவால்களைக் சுட்டிக்காட்டும் வகையிலும் இந்தச் செய்தி அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டில் நிலவும் தற்காலச் சமூகச் சூழலில் பல குழந்தைகளைப் பெற்றெடுப்பது குறித்த விவாதங்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.
