ஜப்பானின் பிரபல ஓவியர் யாயோய் குசாமா காலமானார்!

 
ஜப்பானின் ஓவியர் யாயோய் குசாமா

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய ஓவியரும் சிற்பியுமான யாயோய் குசாமா தனது 97-வது வயதில் காலமானார். அவரது மறைவுச் செய்தி தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது கலை உலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்த யாயோய் குசாமா, சிறுவயது முதலே கலைத்துறையில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தனது பிரத்யேகமான புள்ளி வடிவ ஓவியங்கள் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ்பெற்றார்.

1960-களில் ஆண் ஆதிக்கம் நிறைந்த நியூயார்க் கலை உலகில் தனது தனித்துவமான படைப்புகளால் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக, 1965-ல் அவர் உருவாக்கிய "இன்பினிட்டி மிரர் ரூம்" கலைப்படைப்பு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கலை உலகில் பல்வேறு சவால்களைக் கடந்து தனது முதிய வயதிலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அவர், 2022-ல் ஏலத்தில் விடப்பட்ட அவரது ஓவியம் ஒன்று சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 100.28 கோடி) விற்பனையாகி சாதனை படைத்தது. மேலும் அவரது "ரெட் பம்ப்கின்"  சிற்பம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும்.

மனநலக் குறைவு காரணமாகத் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி காலமானார். குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப இறுதிச் சடங்குகள் அமைதியாக முடிக்கப்பட்ட நிலையில், 13 நாட்கள் கழித்து அவரது மறைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.