ஐசிசி தலைவராக 2வது முறையாக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு... குவியும் வாழ்த்துகள்!

 
ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாலியில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஜெய் ஷாவின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, வேறு யாரும் போட்டியிடாததால் அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐசிசி கிரிக்கெட் டி20

2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் இடம்பெறவுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ஜெய் ஷாவின் நிர்வாகத் திறன் மற்றும் தலைமையின் மீது ஐசிசி வாரியம் கொண்டுள்ள முழு நம்பிக்கையை இந்த மறுதேர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டைப் பரவலாக விரிவுபடுத்துதல், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குக் கூடுதல் ஊக்கமளித்தல், வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவையே ஐசிசியின் முதன்மை இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

தனது மறுதேர்வு குறித்துப் பேசிய ஜெய் ஷா, "ஐசிசி வாரியம் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் களமிறங்குவது என்பது, உலகம் முழுவதும் புதிய ரசிகர்களையும் அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்கக் கிடைத்துள்ள மிக அரிய வாய்ப்பாகும். உலக மக்களை ஒன்றிணைப்பதே கிரிக்கெட்டின் மிகப்பெரிய பலம்; வெறும் போட்டிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல், வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருவதே எங்களின் பிரதான நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு சர்வதேச அளவிலும் முத்திரை பதித்து வரும் ஜெய் ஷா, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.