ஜெயலலிதா பிறந்தநாள்.. 78 கிலோ கேக் வெட்டும் இபிஎஸ் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா?
இன்று காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து, ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், 78 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி வெட்டி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்க உள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு நிலவுகிறது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, "அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் மற்றும் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்" போன்ற அதிரடி வாக்குறுதிகளை இபிஎஸ் அறிவித்துள்ளார். நாளைய தினத்தில் மகளிரைக் கவரும் வகையில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தொண்டர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
