இன்று ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு... எப்படி பார்ப்பது? முழு விவரம்!
தேசிய தேர்வு முகமை (NTA), ஜேஇஇ மெயின் 2026-ன் இரண்டாம் அமர்வு முடிவுகள் இன்று ஏப்ரல் 20ம் தேதி வெளியாகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமான நடைமுறையின்படி, தேர்வு முடிவுகள் இன்று மாலை அல்லது இரவு நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லைப் பயன்படுத்தித் தங்களின் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகியவற்றில் முடிவுகள் வெளியிடப்படும்.
உங்கள் மதிப்பெண் அட்டையில் பாடவாரியான என்டிஏ மதிப்பெண்கள், ஒட்டுமொத்தப் பெர்சென்டைல் , அகில இந்திய தரவரிசை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்தத் தேர்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள், ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங் படிப்புக்கான தாள்-2 முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NTA பொதுவாகத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேதியின் மாலை அல்லது நள்ளிரவு நேரத்தில்தான் வெளியிடும். எனவே, இன்று மாலை 6 மணிக்கு மேல் அல்லது இரவு நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லிங்க் ஆக்டிவேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுகள் வெளியானதும் கீழே உள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் மதிப்பெண் அட்டையைப் பெறலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள "JEE Main 2026 Session 2 Result" என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும். மதிப்பெண் அட்டை திரையில் தோன்றும், அதைத் தரவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

தேர்வு முடிவுகள் வெளியாவதற்குச் சற்று முன்போ அல்லது முடிவுகளுடனோ இறுதி விடைக் குறிப்பும் வெளியிடப்படும். இது இரண்டாம் அமர்வு என்பதால், முதல் மற்றும் இரண்டாம் அமர்வு இரண்டிலும் நீங்கள் பெற்ற சிறந்த மதிப்பெண்களின் அடிப்படையில் உங்களின் அகில இந்திய தரவரிசை கணக்கிடப்படும்.
அடுத்த கட்டமாக இதில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
