கொளுத்தும் வெயிலில் முகச் சோர்வு, எரிச்சலைத் தீர்க்க வீட்டிலேயே இதை செய்து பாருங்க!

 
பனிக்கட்டி பனிக்கட்டி

கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் வியர்வை காரணமாகப் பலருக்கும் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும வறட்சி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய தொல்லைகளில் இருந்து நமது முகத்தைப் பாதுகாப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க இயற்கை முறையிலான பனிக்கட்டி மருத்துவம் பெரும் துணையாக இருக்கும் என அழகுக் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எளிய பொருட்களைக் கொண்டே இதற்கான பனிக்கட்டிகளை மிக எளிதாகத் தயார் செய்துவிடலாம்.

அந்த வகையில் தக்காளி சாறு அல்லது வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து பனிக்கட்டி தட்டுகளில் ஊற்றி உறையவைத்து முகத்தில் தேய்த்து வரலாம். இது வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையைப் போக்குவதுடன், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பனிக்கட்டியாக்கி முகத்தில் தடவினால் முகப்பருக்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக மாற்றும்.

மேலும் கொதித்த நீரில் புதினா இலைகள் அல்லது பச்சைத் தேயிலையைப் போட்டுக் குளிரவைத்து, அதனைப் பனிக்கட்டிகளாக மாற்றி முகத்தில் மசாஜ் செய்து வரலாம். இந்த எளிய இயற்கை முறை மருத்துவமானது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி முகத்திற்கு ஒரு தனித்துவமான அழகைத் தரும். விலையுயர்ந்த இரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, 5 நிமிடங்களை இதற்காக ஒதுக்கினால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி கோடைகாலத்திலும் உங்களின் முகம் பளபளப்பாக மின்னும்.