ஜெம் வீரமணிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வசதிகள் - சிறைத்துறை அதிகாரிகள் தகவல்!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணிக்கு தனியறை, கட்டில், மின்விசிறி, மேற்கத்திய கழிவறை வசதி மற்றும் தினமும் காலையில் பத்திரிகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து சிறை மருத்துவர்கள் தினமும் பரிசோதனை மேற்கொள்வதோடு, அவர் கேட்கும் மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், அவர் சிறை உணவை மட்டுமே உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.

வாரத்திற்கு இரண்டு முறை உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர் மற்ற கைதிகளுடன் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கும் வகையில் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரைப் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவரைப் போலீசார் தேடி வரும் நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தன் பெயர் எஃப்ஐஆர்-ல் சிக்காமல் இருக்க, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் வீரமணி சுமார் 70 கோடி ரூபாய் வரை பேரம் பேசி செட்டில் செய்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களும் விசாரணையில் வெளியாகி உள்ளன.
