ஜெம் வீரமணி பாலியல் வழக்கு - முந்தைய திமுக ஆட்சிக்கால காவல் உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பத் திட்டம்!
ஏழை மாணவிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி சிறுமிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியில் பணியில் இருந்த காவல் உயர் அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பக் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி, தற்போது மூன்று நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்பக் கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி மீது இதற்கு முன்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆட்சியில் இந்த வழக்கை கையாண்ட காவல் ஆய்வாளர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தி.மு.க. ஆட்சிக்காலத்தில் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதற்காகச் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய விசாரணைக் குழுவை அமைத்துக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
