நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு.. ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை வழங்க தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பை உயர்த்தித் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் படி, கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடனுக்கான ஒரு கிராமிற்கான கடன் தொகையானது அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் (இவற்றுள் எது குறைவோ) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. தங்கம் விலை உயர்வைக் கருத்தில்கொண்டு இந்த வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட கடன் வரவானது புதிதாக நகைக்கடன் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் பெற்றுத் தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர எளிய மக்களின் அவசர கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
