மலையடிவாரத்தில் சாக்குப்பையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள்... தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் நகைகள் மீட்பு!

 
தனிஷ்க்

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் அரங்கேறிய பிரம்மாண்டக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் மீனாட்சியிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகள் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. கைதான பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மாடக்குளம் மலையடிவாரப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

மதுரையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல்கோடி ரூபாய் கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கில் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சரான மீனாட்சி உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

தனிஷ்க்

காவல்துறைக் காவலில் எடுக்கப்பட்டு மீனாளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எங்குப் பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மீனாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை ரகசியமாக மாடக்குளம் மலையடிவாரப் பகுதிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு நிலத்தில் சாக்குப்பையில் கட்டிப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க நகைகளைக் காவல்துறையினர் வெட்டி எடுத்துப் பறிமுதல் செய்தனர்.

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை

கைப்பற்றப்பட்ட நகைகள் தனிஷ்க் கடையில் கொள்ளையடிக்கப்பட்டவைதானா என்பது குறித்து நகைக்கடை அதிகாரிகளைக் கொண்டு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது மற்றும் மீதமுள்ள குற்றவாளிகள் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.