குவியல் குவியலாக நகைகள், கட்டுக்கட்டாக பணம்... யூ-ட்யூப்பில் ஆட்டம் போட்ட மதுமிதா வீட்டில் 120 சவரன் நகைகள், பணம் கொள்ளை!
நாகர்கோவிலில் சமூக வலைதளங்களில் நகைகளையும் பணத்தையும் காட்டி ரீல்ஸ் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டின் பூட்டை உடைத்து 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் தம்மத்து கோணம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி மதுமிதா. ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்துவரும் இவங்க தம்பதியினர் பிரபல யூடியூபர்களாக வலம் வருகின்றனர். குறிப்பாக மதுமிதா, தான் வாங்கும் புதிய தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாகப் பணத்துடன் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தொடர்ந்து பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மதுமிதாவின் இந்த அலட்டல் வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம நபர்கள், குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டைக் கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கம் (இதன் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

விஐபி கார்டன் பகுதியில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், வீட்டின் பின்புறமாகச் சென்று கைவரிசை காட்டியுள்ள கொள்ளையர்களின் துணிச்சல் அப்பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்துச் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்துத் தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
