தமிழகத்தில் தங்க நாணய விற்பனை திடீர் நிறுத்தம் - நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு!

 
தங்க நாணயம் காய்ன் தங்க நாணயம் காய்ன்

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு நகை வாங்குவோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் தங்க நாணயங்கள் விற்பனை உடனடியாக நிறுத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு எடுத்து வரும் அந்நிய செலாவணி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தங்கம்

பொதுவாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது நாட்டின் அந்நிய செலாவணி வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்தச் சூழலில், முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்க நாணயங்களின் விற்பனையைக் குறைப்பதன் மூலம் அரசுக்கு உறுதுணையாக இருக்க நகைக்கடை உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

தங்க நாணய விற்பனை நிறுத்தம் மட்டுமல்லாது, நகை சேமிப்புத் திட்டங்கள் மற்றும் நகை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான அனைத்து விதமான விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த இச்சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகத் தனது நிலைப்பாட்டை விளக்கி பிரதமர் நரேந்திர மோடிக்கும் இச்சம்மேளனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைவு

தமிழக நகைக்கடை உரிமையாளர்களின் இந்தத் திடீர் அறிவிப்பு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேமிப்பிற்காகத் தங்க நாணயங்களை வாங்க நினைப்பவர்களுக்கு இது தடையாக மாறியுள்ளது. ஆபரணத் தங்க விற்பனை குறித்து எந்தத் தடையும் இல்லை என்றாலும், சேமிப்புத் திட்ட விளம்பரங்கள் நிறுத்தப்படுவது விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி நேரங்களில் அரசுக்கு ஆதரவாகத் தனியார் கூட்டமைப்புகள் இது போன்ற முடிவுகளை எடுப்பது அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தமிழக நகைக்கடை உரிமையாளர்களின் இந்தச் செயல், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.