நகைக்கடை கொள்ளை... சிசிடிவி, பைக் பதிவு எண் மூலம் ஒரு மணி நேரத்தில் துப்பு துலக்கிய போலீசார் - 5 பேர் கைது!

 
கொள்ளை சிசிடிவி

திருவனந்தபுரம் சாலா பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நவீன தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை ஒரு மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக வயநாடு தப்பிய நிலையில், மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வைத் கைது செய்யப்பட்டுள்ளது.

சாலா பகுதியில் நகைக்கடை உரிமையாளர் நந்தகுமார் என்பவரின் பை மர்மக் கும்பலால் பறிக்கப்பட்டது. ஆரம்பத்தில் குற்றவாளிகள் புல்லட் பைக்கில் வந்ததாகக் கூறப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அவர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஹோண்டா சிபி 350 பைக்கில் வந்தது தெரியவந்தது.

நகை கொள்ளை

குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே உள்ள இத்தகைய பைக்குகளின் பதிவேடுகளைச் சரிபார்த்த காவல்துறையினர், அது நகரத்தில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அனில் என்பவருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர்.

அனில் நீண்ட காலமாக எர்ணாகுளத்தில் வசித்து வந்தாலும், சம்பவம் நடந்த அன்று சாலா பகுதியில் அவரது செல்போன் எண் டவர் எல்லைக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும், சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் பதிவான பிற எண்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் திட்டமிட்டுச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. வியாழக்கிழமை மாலை 7:30 மணிமுதல் கிளிப்பாலம் சந்திப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்த அந்தக் கும்பல், அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலையும் கொள்ளைக்கான சூழ்நிலையையும் மதிப்பிட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் மீண்டும் நகைக்கடையை அடைந்த அவர்கள், இரவு 10:30 மணியளவில் கடையை மூடிவிட்டுச் சென்ற நந்தகுமாரைப் பின்தொடர்ந்து சென்று அவரது பையைப் பறித்துச் சென்றுள்ளனர். நந்தகுமார் வீடு திரும்பும் தகவலை மற்றொரு குற்றவாளி முன்கூட்டியே கண்காணித்துத் தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், நகைக்கடை உரிமையாளரான நந்தகுமாருக்கு இவ்வளவு பெரிய அளவில் தங்கம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களில் இரண்டு கிலோ தங்கம் பெறப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதோடு, கொள்ளைக் கும்பலுக்கும் நகை உரிமையாளருக்கும் தொடர்பு உள்ளதா மற்றும் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்தும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.