பழனி இடும்பன் கோவிலில் நகை திருட்டு.. நகைகளை உருக்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் ஊழியர்!

 
பழனி நகைத்திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற இடும்பன் கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில், தற்காலிகப் பெண் ஊழியர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பழனி இடும்பன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சாமி சிலைகளுக்குத் தினசரி மற்றும் சிறப்பு வழிபாடுகளின்போது அணிவிக்கப்படும் சுமார் 20.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போயின. கோவிலில் இருந்து மதிப்புமிக்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

பழனி முருகன்

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் எந்தவிதத் துப்பும் துலங்காமல் இருந்த இந்த வழக்கில், தற்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

விசாரணையின் முடிவில், பழனி இடும்பன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26) மற்றும் அவரது நெருங்கிய ஆண் நண்பரான நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஆண்டில்தான் நிரஞ்சனா இடும்பன் கோவிலில் தற்காலிகப் பணியில் சேர்ந்துள்ளார். அந்தச் சமயத்தில் கோவிலின் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி அவர் தொடர்ச்சியாகத் தங்க மற்றும் வெள்ளி நகைகளைத் திருடியுள்ளார். பின்னர், திருடிய நகைகளைத் தனது நண்பர் பிரபாகரனுடன் இணைந்து வெளியில் கொண்டு சென்று முழுமையாக உருக்கியுள்ளார். அவ்வாறு விற்றுக்கிடைத்த லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு இருவரும் பல்வேறு ஆடம்பரப் பொருட்களை வாங்கியதுடன், பல்வேறு இடங்களுக்குச் சென்று சொகுசாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகை கொள்ளை

இந்தச் பரபரப்பான நகை திருட்டு வழக்கில் கைதான இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தத் திருட்டில் இவர்களைத் தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா அல்லது நகை விற்பனையில் வேறு நபர்களுக்குச் பங்குள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.