காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள் - அட்சயதிருயைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்!
அட்சய திருதியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் தங்க விற்பனை படுஜோராகத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில், தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் மக்கள் அதிகாலை முதலே நகைக்கடைகளில் தவம் கிடக்கின்றனர்.

பொதுவாக நகைக்கடைகள் காலை 9 அல்லது 10 மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால், அட்சய திருதியை ரஷ்ஷை சமாளிக்கச் சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகள் அனைத்தும் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று (ஏப். 19) காலை தொடங்கி, நாளை வரை உள்ளது. இதனால் இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுமே தங்கம் வாங்க உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது.

நகை வாங்க வருபவர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விரைவாக விற்பனை செய்யவும் பல கடைகளில் தங்க நாணயங்களுக்கென தனிச் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் காத்திருந்தாலும் சளைக்காமல், தங்களுக்குப் பிடித்தமான டிசைன்களில் நகைகளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
