பரபரப்பு... நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை... தடுக்க வந்த மகனுக்கும் வெட்டு!

 
pallipalayam

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் 75 வயதான சம்பூர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திய மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறிக்க முயன்ற போது, அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் மூதாட்டியின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்தது.

ஆம்புலன்ஸ்

அப்போது வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மகன், தாயைக் காப்பாற்ற ஓடிவந்து குற்றவாளிகளைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் இரக்கமற்ற அந்த மர்ம நபர்கள் அவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திப் பலத்த காயத்தை ஏற்படுத்தினர். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயமடைந்த மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.